Tuesday, March 9, 2010

கடவுள் எந்த மதம்

சாமியாருங்க என மரியாதை செய்த காலம் மாறி 'சாமி'யாருங்க! நீங்க என கேள்வி கேட்கும் காலம் வருமா என்றால் அதற்கு பதில் சந்தேகம் தான், என்பதே.

இத்தனை சாமியார்கள், கள்ளப்போதகர்களைக் கண்ட பின்னர் கூட தமிழகமும், தமிழனும், தமிழினமும் இன்னமும் அதே மதமென்னும் சாக்கடையில் வீழ்ந்து கிடக்கத்தான் செய்கிறது.

சில தினங்கள் முன்பு வரை தெய்வமாக கருதியவரை இன்று தேவையற்றவராக கருதுவதும்; தீர்விற்காக அவரிடம் அண்டியவர்கள் இன்று தீயவர் என்று கருதுவதும் வேடிக்கை.

நல்லது எது! கெட்டது எது! என வேறுபிரிக்க தெரிந்த நம் மகா ஜனங்கள் ஏன் மனிதர்களை கடவுளாக உருவகம் செய்தனர் என்பது தான் கேள்வி எழுப்பப்பட வேண்டிய விஷயம்.

இவ்வுலகில் நல்லவன் ஒருவனுமில்லை, ஒருவனாகிலும் இல்லை என்ற விவிலியத்தின் ஒரு வாக்கு தான் நினைவிற்கு வருகிறது.

ஒருவர் ஒரு விஷயத்தை செய்த உடன் அது தவறு என தீர்மானிக்கும் நாம் ஏன் பிற மனிதர்களை நாடித் தேட வேண்டும்; ஏன் சாமிகளாக அவர்களை கருத வேண்டும்?அவர்களிடமிருந்து வாழும் வழிக்கான நெறிமுறையை ஏன் கற்றுக்கொள்ள வேண்டும்; பின்னர் எதற்காக கூப்பாடு போட வேண்டும்?

நாமே நமது வழியை தீர்மானித்து கொள்ளலாமே.

பக்திக்கு மதச் சாயமோ, இனச் சாயமோ தேவையில்லை என்பது தான் எனக்கு சரியெனப் படுகிறது.

மனிதனுக்கு உரிய மரியாதை அளிக்க வேண்டியது தான், ஆனால் அவனை கடவுளென்றோ, சாமியென்றோ உருவகப்படுத்துவது கடவுள் என ஒருவர் இருப்பாரானால் அது அவருக்கு ஏற்படுத்தும் இழுக்கு என்பதாகவே பொருள் கொள்ள தோன்றுகிறது.

இன்னொரு விஷயமும் இந்த நேரத்தில் கேட்கத் தோன்றுகிறது, கடவுள் எந்த மதத்தை சார்ந்தவர்?!?