[Prevention Of Forcible Conversion Of Religion Act-In the aspect of BIBLE]
'இந்த கட்டுரை, சட்டம் அமுலாக்கப்பட்ட வருடமான 2002ல் என்னால் எழுதப்பட்டு போர்ச்சத்தத்தில் வெளியிடுவதற்கு மறுக்கப்பட்ட ஒன்று'
அனைவருக்கும் கிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துக்கள்.சில வருடங்களுக்கு முன்பதாக தமிழகத்தில் 'கட்டாய மத மாற்ற தடைச் சட்டம்' என்ற சட்டம் அமுலாக்கப்பட்டது பலருக்கு நினைவிருக்கலாம்.
அதன் தொடர்ச்சியாக பல கிறிஸ்தவ சபைகளும்,பிற மதங்களைச் சார்ந்தவர்களும் அந்த சட்டத்தைத் தமிழக அரசு திரும்பப் பெறல் வேண்டும் என்ற கோரிக்கையை முன்னிறுத்தி பலவிதமான போராட்டங்களை நடத்தினர்.
இவைகளுக்கு மனுஷராலுமல்ல மனுஷன் மூலமாயுமல்ல,இயேசு கிறிஸ்துவினாலும் அவரை மரித்தோரிலிருந்தெழுப்பின பிதாவாகிய தேவனாலும் (கலாத்தியர் 1:1) அப்போஸ்தலர்களாலும், கர்த்தரால் ஏவப்பட்டவர்களாலும் எழுதப்பட்ட வேதாகமத்தின் இரகசியங்களை நாம் ஆராய்வது அவசியமாகிறது.
1. கிறிஸ்தவம் மதம் அல்ல 'மார்க்கம்'
முதலாவது கிறிஸ்தவம் என்பது மதமல்ல என்பதை மனதில் கொள்ள வேண்டும்.எபிரெயர் 10:19ல் ஆகையால் சகோதரரே இயேசுவானவர் புதிதும் ஜீவனுமான 'மார்க்கத்தை' நமக்கு உண்டுபண்ணின படியால்...என்ற வசனத்தினாலும்;யோவான் 14:6ல் நானே வழியும், சத்தியமும், ஜீவனுமாயிருக்கிறேன் என்ற இயேசு கிறிஸ்துவின் வார்த்தையாலும் கிறிஸ்தவம் என்பது மதமல்ல அது நித்திய ஜீவனுக்கான மார்க்கம் அல்லது வழி என்பது நிரூபணமாகிறது.
மேலும் யோவான் 14:3,4 மற்றும் 4-6 வசனங்களில்... நான் போய் உங்களுக்கு ஒரு ஸ்தலத்தை ஆயத்தம் பண்ணின பின்பு...நான் மறுபடியும் வந்து உங்களை என்னிடத்தில் சேர்த்துக் கொள்ளுவேன்;நான் போகிற இடத்தை அறிந்திருக்கிறீர்கள் என்றும் இயேசு கிறிஸ்து உரைத்திருக்கிறார்.
இவ்விதமாக இயேசு கிறிஸ்து தனது சீஷர்களுடன் உறவாடும் போது 'வழி'யை அறிந்திருக்கிறீர்கள் என்று தான் வார்த்தைகளை உதிர்த்தாரே தவிர மதம் என்ற உச்சரிப்பையே அவர் உபயோகிக்கவில்லை.
(வழி/அல்லது மார்க்கத்திற்கு இணையான ஆங்கில வார்த்தையும் way என்பதாகவே இருக்கிறது)
இயேசுகிறிஸ்து நித்திய ஜீவனுக்கான வழியை அல்லது மார்க்கத்தை இந்த உலகிற்கு காட்ட வந்தாரே அன்றி ஒரு மதத்தை ஸ்தாபிக்க வரவில்லை என்பது இதன் மூலம் நமக்கு தெளிவாகிறது.
மதத்தின் பெயரால் நாம் பிறரை கட்டாயப்படுத்தினால் அல்லவா நாம் பிறருக்கு பதில் சொல்ல வேண்டிய கட்டாயத்துக்குள்ளாவோம்.நாமோ கிறிஸ்துவின் அன்பையும்,நித்தியஜீவனுக்கான வழியையும் அல்லவா அவர்களுக்கு காட்டுகிறோம்.
மதம் என்பது வெறி,கோபத்தின் உச்சம் என்பதாக பொருள்படும்.எனவே மதம் பிடித்த யானையைப் போல் பிற மாக்களைப் போல நடவாமல் ஆவியின் கனிகளான (கலாத்தியர் 6:22,23)அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடியபொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம், சாந்தம், இச்சையடக்கம் இவைகளை கொண்டு கர்த்தராகிய இயேசுகிறிஸ்து மாற்கு 16:15ல் கூறியுள்ளபடி... 'உலகமெங்குள்ள மக்களுக்கு அவருடைய சுவிசேஷத்தை பிரசிங்கிப்பது நமது கடமையாயிருக்கிறது.
2.கட்டாயத்தின் மூலம் மனித மதங்களை மாற்றுவதல்ல கிறிஸ்தவம்
உங்களிடத்திலுள்ள தேவனுடைய மந்தையை நீங்கள் மேய்த்து,'கட்டாயமாய் அல்ல', மனப்பூர்வமாய்...சுதந்தரத்தை இறுமாப்பாய் ஆளுகிறவர்களுக்காக அல்ல(இன்றைய ஆட்சியாளர்களைப் போல) மந்தைக்கு மந்திரிகளாகவும் கண்காணிப்பு செய்யுங்கள் என்ற I பேதுரு 5:2,3ன் படியும்;அவனவன் விசனமாயுமல்ல,கட்டாயமாயுமல்ல தன் மனதில் நியமித்தபடியே கொடுக்கக்கடவன் என்ற IIகொரிந்தியர் 9:7ன் கூற்றின்படியும் கட்டாயப்படுத்தல் என்ற வார்த்தை கிறிஸ்தவத்தின் வேரிலேயே கிடையாது என்பது தெளிவாகிறது.
அப்போஸ்தலர் 26:11-18வரையான வேத வார்த்தைகளை உற்று நோக்கும் போது முன்னாட்களில் கட்டாயப்படுத்தியது எந்த சமூகத்தைச் சார்ந்தவர்கள் என்பதை நாம் நன்கு புரிந்து கொள்ளவியலும்.
அப்போஸ்தலர்26:16 ன் படி இயேசுகிறிஸ்துவின் மூலம் கட்டாயத்தினால் அல்ல... அவரது தரிசனத்தால்,பெரும் யூதனாயிருந்த சவுல் தேவ ஊழியக்காரனான பவுலாக மாறிய நிகழ்விலிருந்து கட்டாயத்தின் மூலம் மதம் மாற்றம் என்ற வார்த்தைக்கு கிறிஸ்தவ சரித்திரத்திலேயே இடம் கிடையாது என்பது மீண்டும் தெளிவாகிறது.
இதே பவுலானவர் தான் சுவிசேஷம் பிரசிங்கித்ததன் விளைவாக கட்டப்பட்டவனாய் இருக்கையில்... பிலேமோனுக்கு உதவி வேண்டி பின்வருமாறு எழுதுகிறார் (பிலேமோன் 1:14) நீர் செய்யும் நன்மையை கட்டாயத்தினால் அல்ல, மனப்பூர்வமாய் செய்யத்தக்கதாக, நான் உம்முடைய சம்மதியில்லாமல் ஒன்றும் செய்ய எனக்கு மனதில்லை.
நெருக்கத்தின் நிலையிலும் பவுல் கட்டாயப்படுத்தவில்லை என்பது இதில் கண்கூடு.எனவே கிறிஸ்தவம் தனது சுதந்தரத்தின் போதும்,நெருக்கத்தின் நடுவிலும் கூட பிறரைக் கட்டாயப்படுத்துவதில்லை என்பது வெட்ட வெளிச்சமாகிறது.
3.சட்டம் நமக்கு என்ன செய்து விடும்... இல்லையென்றால் நாம் பாடுபடுவதை வெறுக்கிறோமா?
கட்டாய மதமாற்றத் தடைச்சட்டத்தின் மூலம் மட்டுமல்ல பிற பிரச்சினைகள்,பாடுகள், மிரட்டல்கள் வருகையிலும் கிறிஸ்தவர்கள் ஏன் சோர்ந்து போகிறோம்? அவ்விதமான பாடுகளை ஏன் ஏற்றுக் கொள்ள மறுக்கிறோம்?
"துயரப்படுகிறவர்கள் பாக்கியவான்கள்,பரலோகராஜ்யம் அவர்களுடையது" என்று எட்டு மோட்சானந்தங்களில் கிறிஸ்து சொல்லிச் செல்லவில்லையா?
கட்டாயமே கிறிஸ்தவ மார்க்கத்தில் இல்லாத நிலையில் நாம் எதற்கு அஞ்சுகிறோம்?சட்டத்தை எதிர்த்து போராட்டங்கள்,பேரணிகள்,மாநாடுகள் நடத்துவதால் என்ன விளையப் போகிறது?
இவைகளினால் காலமும்,பணமும் தான் விரயமாகிறது.தொடர்ந்து போராடுவது கட்டாயப்படுத்தலை அனுமதிக்கக் கோருவது போலவும் ஆகி விடுகிறது.கிறிஸ்தவமே கட்டாயப்படுத்தலை அனுமதிக்காத நிலையில் நாம் ஏன் முரண்படுகிறோம்?
அப்படியே சட்டம் தவறாக பயன்படுத்தப்பட்டு நாம் அவதிக்குள்ளானாலும் அதனால் பேதுரு எழுதுகிறபடி தேவ நாமம் மகிமைப்படுமே!! Iபேதுரு 4:16 - ஒருவன் கிறிஸ்தவனாயிருப்பதினால் பாடுபட்டால் வெட்கப்படாமலிருந்து அதினிமித்தம் தேவனை மகிமைப்படுத்தக்கடவன்.
பவுல் பாடுகள் குறித்து I கொரிந்தியர் 6:7 ல் பின்வருமாறு கூறுகிறார்,நீங்கள் ஒருவரோடொருவர் வழக்காடுகிறது எவ்விதத்திலும் குற்றமாயிருக்கிறது,அப்படி செய்கிறதை விட நீங்கள் ஏன் அநியாயத்தைச் சகித்துக் கொள்ளுவதில்லை,ஏன் நஷ்டத்தை பொறுத்துக் கொள்ளுகிறதில்லை?
இன்னும் கூறப்போனால் இயேசு கிறிஸ்துவும் பொய் குற்றச்சாட்டுகளினால் நிமித்தமே பாடுகள் அனுபவித்தார்.
இப்படியிருக்க கிறிஸ்து நமக்காக மாம்சத்திலே பாடுபட்டபடியால் நீங்களும் அப்படிப்பட்ட சிந்தையை ஆயுதமாக தரித்துக் கொள்ளுங்கள் என்று பவுல் I பேதுரு 4:1 ல் எழுதிச் சென்றபடி சகிப்புத்தன்மை என்ற ஆயுதத்தைக் கொண்டு கிறிஸ்தவ மார்க்கத்தைப் பிறருக்குக் காட்ட எத்தனிப்போம்.