1865 ல் கிழக்கு லண்டன் கிறிஸ்தவ பணி என்று ஆரம்பிக்கப்பட்டு இந்நாட்களில் இரட்சணிய சேனை (The Salvation Army) என்றறியப்படும் கிறிஸ்தவ தொண்டு நிறுவனம் 2/7/2015 ல் தனது 150 ஆவது ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது.
அந்த கொண்டாட்டங்களின் ஒருபாகமாக கிழக்கு லண்டனின் மிகப்பெரிய அரங்கான O2 Arena வில் 126 நாடுகளில் இருந்து பிரதிநிதிகள் கலந்து கொள்ளும் மாநாடு இந்த மாதம் முதல் தேதி துவங்கி ஐந்தாம் தேதி வரை நடைபெறவிருக்கிறது.
இரட்சணிய சேனை அமைப்பு இப்போது 126 நாடுகளில் தனது தன்னார்வ தொண்டுப் பணிகளையும், நலிந்தவர்களுக்கு கல்விச்சேவையையும், மருத்துவச் சேவைகளையும், பேரிடர் உதவிப்பணிகளையும், வழங்கிவருவதைக் குறித்து, இந்த அமைப்பைச் சார்ந்தவன் என்ற அடிப்படையில் பெருமைப்படுகிறேன்.
இந்தியாவைப் பொருத்த வரையில் 1882 ல் பம்பாயில் ஃப்ரெடரிக் பூத் டக்கர் என்ற ஆங்கிலேயரால் துவங்கப்பட்ட இதன் பணிகள் ஆரம்ப காலங்களில் பல நெருக்கடிகளையும், சவால்களையும் கடந்து வந்ததை மறுப்பதிற்கில்லை.
1853 ல் தமது தந்தை பீகாரில் துணை ஆணையாளராக இருந்த போது பிறந்த ஃப்ரெடரிக் பூத் டக்கர். 1881 ல் இங்கிலாந்தில் விடுமுறையில் இருந்த போது பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி தொண்டுப்பணிக்கு தன்னை அர்ப்பணித்திருந்தார். அதுவரை அமிர்தசரஸ், சிம்லா ஆகிய பகுதிகளில் உதவி ஆணையாளராகவும், உதவி நீதிபதியாகவும் பதவிகள் வகித்திருக்கிறார்.
உயர்பதவிகள் பல வகித்திருந்தும் தொண்டுப் பணிகளை செய்யும் படியாக தன்னை அர்ப்பணித்து தனது ஆங்கிலப் பெயரை ஃபக்கீர் சிங் எனவும் மாற்றி, பல தொலைவுகள் கடந்து, பசியிலிருப்போர், கைவிடப்பட்டோர், பிச்சைக்காரர்கள், மதுபான அடிமைகள் போன்றோர் மத்தியில் தொண்டு ஆற்றியிருக்கிறார்.
இவரைப் போன்றோரினாலும், தங்கள் வாழ்க்கையை நலிந்தவர்களுக்கென அர்ப்பணித்த ஆங்கிலேயர்களாலும், இந்தியர்களாலும் கட்டி எழுப்பப்பட்ட இரட்சணிய சேனை தொண்டு நிறுவனம் இன்று இந்தியாவில் நலிவடைந்து வருவதை கனத்த மனதுடன் பதிவு செய்ய வேண்டியதாயிருக்கிறது.
குறிப்பாக தாயில்லா குழந்தைகள் பாதுகாப்பு மையம், ஊனமுற்றோருக்கான பட்டயப் படிப்பு பயிற்சி மையம், ஏழை எளியோருக்கான பள்ளிகள் மூடப்பட்டிருக்கின்றன.
இவற்றையெல்லாம் பார்க்கும் பொழுது, இந்தியாவில் 133 ஆண்டு கால சரித்திரம் உடைய தொண்டு நிறுவனத்தை அதன் அழிவிற்கு நேராக வழிநடத்தி செல்லுகிறார்களோ என்ற அச்சம் எழாமலில்லை.
பூத் டக்கர் அவர்கள் 1891 ல் 'இருண்ட இந்தியா' என்ற புத்தகத்தில் இந்தியா, பட்டினியினாலும், பஞ்சத்தினாலும், விபச்சாரத்தினாலும், குடி வெறியர்களாலும், சாதிப் பிரிவுகளினாலும் பெரும்பாடு படுகிறது என்று குறிப்பிட்டிருக்கும் நிலை 124 ஆண்டுகள் கழித்து இன்றும் தொடர்கிறது என்பது மிகவும் வருத்தப்படவும், கேவலப்படவும் வேண்டிய விஷயம்.
இத்தனை களேபரங்கள் மத்தியிலும் இந்த அமைப்பின் நற்பணிகளுக்கென்று தொடர்ந்து தங்களை ஈடுபடுத்தி வரும் ஒவ்வொருவரும் பாராட்டப்பட வேண்டியவர்களே.
150 ஆவது ஆண்டு கொண்டாட்டங்களில் பங்கு பெற இந்தியாவில் இருந்து பிரயாணப்பட்டுச் சென்றிருப்பவர்கள், நாமும் லண்டன் சென்றோம், சில நினைவுகளைத் தேக்கினோம் என்ற மட்டில் நின்று விடாமல், புதிய உத்வேகத்தோடு தொண்டுப் பணிகளைத் தொடர்வார்களானால், 150 வருடங்கள் முன்னர் இந்த கிறிஸ்தவ தொண்டு நிறுவனத்தை ஏற்படுத்திய வில்லியம் பூத்தின் கனவு நனவாகும்.