கடந்த வெள்ளி அன்றும் நேற்றும்(12.04.09) நான் உரையாடியவர்கள் எல்லாம் என்னிடம் கேட்ட பொதுவான ஒரு கேள்வி "ஆலயத்திற்கு சென்றாயா" என்பதே?
பண்டிகைக் காலங்களில் மட்டும் தேவாலயங்கள் வழக்கத்திற்கு மாறாக நிரம்பி வழிவதையும்; அன்று வரை பாரா முகங்களாக இருந்த பல முகங்களையும் பார்க்க நேரிடுவதும் உண்டு.இது பிற சமய வழிபாட்டு தலங்களில் எப்படி என தெரியவில்லை.என்றாலும் நண்பர்களிடம் விசாரித்த வரையில் பெரும்பாலும் அங்கும் இதே நிலை தான் என தெரிய வருகிறது.
வருடத்தின் பிற நாட்களில் வழிபாட்டிற்கு செல்லவில்லை என்றால் கூட வீட்டிலும்,நண்பர் வட்டாரத்திலும் என்ன ஏது என கேட்க ஒருவருமிருக்க மாட்டார்கள்.ஆனால் பண்டிகை காலங்களில் வழிபாட்டிற்கு செல்லவில்லை என்றால் போதும் உடனே கேள்விகளால் துளைக்க ஆரம்பித்து விடுவார்கள்.
என்னமோ அன்று தான் இறைவன் இம்மண்ணுலகிற்கு இர(ற)ங்கி வருவது போன்ற தோரணையை ஏற்படுத்தி விடுவர்.
சமயங்கள் சொல்லும் சத்திய சிந்தனைகளையோ,நீதி நியாயங்களையோ நடைமுறைப் படுத்த முயல்பவர் இங்கு வெகு சிலரே.வழிபாட்டில் பங்கு கொண்டால் மட்டும் போதும் அவர்களுக்கு.அதுவும் பண்டிகைக் காலம் அல்லது விசேஷ வழிபாடு என்றால் நிச்சயம் செல்ல வேண்டும் என்பது அவர்கள் அகராதியில் எழுதப்பட்ட ஒன்று.
இறைவன் கருணை வடிவில்,அன்பின் உருவமாய் எங்கும் நிறைந்திருக்கிறான் என்பதே உண்மை என நான் கருதுகிறேன். அதனை விட்டு விட்டு ஒரு நான்கு சுவருக்குள் நுழைந்தால் அல்லது ஒரு குறிப்பிட்ட வழிபாட்டு தலத்திற்கு சென்றால் இறைவனின் தரிசனம் கிடைக்கும் என்பதை நான் நம்பவில்லை.(விவிலியத்தில் கூட ஒரு இடத்தில் நீங்களே அந்த ஆலயம் என்பதாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது)நம்மையும் நம்மைச் சார்ந்து இருக்கிறவர்களையும் தீமையிலிருந்து விலக்குதலே உண்மையான வழிபாடு.
வழிபாட்டிற்கு செல்வதை நான் குறை சொல்லவில்லை,செல்லக்கூடாது எனவும் சொல்லவில்லை.ஒரு குறிப்பிட்ட நாளில் அல்லது ஒரு குறிப்பிட்ட தலத்திற்கு மட்டும் சென்றால் இறைவனை தரிசிக்கலாம் என்ற நம்பிக்கை ஏன் என்ற கேள்வி மட்டுமே என் மனதில் மையம் கொண்டிருக்கிறது.
பல வழிபாட்டு தலங்களில் விசேஷ வழிபாடுகளின் போது கூட்ட நெரிசலில் சிக்கி மாண்டவரையும் இப்பாரத பூமி பார்த்தவள் தானே!
அதோடு பண்டிகை காலங்களில் ஒலி பெருக்கிகளின் தொல்லை சொல்லி மாளாது.எந்த சமயத்தைச் சார்ந்த பண்டிகை ஆனாலும் வழிபாடு ஆனாலும் ஒலி பெருக்கிகள் மூலம் அவர்கள் தரும் இம்சை பெரும் இம்சை.இறைவனை வழிபடுகிறவர்கள் என்ன காரணத்திற்காக ஒலி பெருக்கிகளில் கூச்சல் போடுகிறார்கள் என்பது தான் விடை தெரியாத கேள்வி.
அருகாமையில் எவர் இருக்கிறார்,நோயாளிகள் இருக்கின்றனரா?வயது முதிர்ந்தவர்கள் இருக்கின்றனரா?தேர்வுகளுக்கு ஆயத்தமாகும் மாணவர்கள் இருக்கினரா என ஒன்றும் யோசிப்பதில்லை.
ஒலிபெருக்கி வைத்து ஊரெல்லாம் கேட்கும்படி பிரச்சாரம் செய்யுங்கள் என அனைத்து சமய வழிபாட்டு நூல்களிலும் எழுதப்பட்டிருக்கிறதோ என்னமோ!
பிறர் தேவை அறிந்து அருளும் உதவியே நாம் செய்யும் உண்மையான வழிபாடாக இருக்கவியலும்.அல்லாமல் வழிபாட்டு தலங்கள் மற்றும் ஒலிபெருக்கிகளைக் கொண்டு இறைவனை வழிபடலாம் என நினைப்பது சரியென படவில்லை.
No comments:
Post a Comment