Wednesday, August 19, 2015

இன்றைய கிறிஸ்தவம் - சில புரிதல்கள்

இளைஞர்களை நல்வழிப்படுத்தவும், அவர்களோடு அளவளாவவும் இன்று பெரும்பாலான சபைகளுக்கும், போதகர்களுக்கும் நேரமில்லாதிருப்பது வருத்தப்பட வேண்டிய விஷயம். ஆராதனை Worship என்பதன் பெயரில் சில பாடல்களுக்கு துள்ளிக்குதித்தால் இறைவன் இறங்கி வந்து விடுவார் என்று நம்ப வைக்கப்படுகின்றனர்.

இளைஞர்களின் பரவலான மனமுறிவுகளுக்கு, தோல்வியே பெருங்காரணம் என்பதை எவரும் மறுத்துவிட முடியாது. தேர்வுகளிலும், பணியிடங்களிலும், உறவுகளிக்கிடையேயான புரிதலிலும் தோற்றுப் போகிறவர்கள் விபரீத முடிவுகள் எடுப்பது இன்று மிகச்சாதாரணமாகி விட்டது.

இத்தகைய தோல்விகளைக் கையாளப் போதுமான வழிகாட்டுதலே தேவையன்றி, தேர்வுகளுக்கான மூன்று நாள் உபவாச ஜெப கூட்டமும், சிறப்பு விண்ணப்ப ஏற்பாடுகளும் அல்ல.

ஜெபம் என்றாலே ஜெபம் தான், நாம் விசுவாசித்துக் கேட்பதை கடவுள் தருவார் என்ற நம்பிக்கையில் ஜெபிக்கிறோம்.  இதில் சிறப்பு /ஸ்பெசல் ஜெபம் எதற்கு?! இது போன்ற Prefix Suffix களால் தான் இன்று கிறிஸ்தவ வியாபாரம் கொடி கட்டிப் பறக்கிறது.

வேதாகமத்தை முறையாக வாசித்தறிந்தவர்கள் கிறிஸ்தவ வியாபாரிகளின் வலைவீச்சிற்கு தப்பித்துக் கொள்கிறார்கள். வேதாகமத்தை வாசிக்காமல் எந்த ஊரில் சிறப்பு/வல்லமை/அற்புத/ கூட்டங்கள் நடந்தாலும் அங்கு செல்பவர்கள் வலையில் விழுந்து போகிறார்கள்.

சமீபத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தில் உயர் பதவி வகிக்கும் தமிழர் ஒருவர் சங்கீதம் 24:6, 10 ஐ வாசிக்கையில் வசனத்தோடு சேர்த்து 'சேலா' என்பதையும் வாசித்தார், அவரோடு சேர்ந்து வாசித்தவர்களும் அதையே பின்பற்றினார்கள். சங்கீதம் 24 :10 - யார் இந்த மகிமையின் ராஜா? அவர் சேனைகளின் கர்த்தரானவர், அவரே மகிமையின் ராஜா. (சேலா.)  இத்தனைக்கும் சேலா, அடைப்புக் குறிக்குள் தான் எழுதப்பட்டிருக்கிறது. இப்படிப்பட்டவர்கள் தான் கிறிஸ்தவ வியாபாரிகளின் இலக்கு.

விரல்நுனிகளில் உலகை வைத்துக் கொண்டிருக்கிற இந்த காலகட்டத்தில், வேதாகம சந்தேகங்களை உடனுக்குடன் அறிந்து கொள்ள எத்தனையோ வழிகள் இருக்கின்றன. இதுவறியாமல் நம் ஜனங்கள் கிறிஸ்தவ வியாபாரிகள் கையில் இன்னும் அடங்கிக் கிடப்பதைத்தான் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

முன்னொரு பதிவில் குறிப்பிட்டிருந்த படி.. இயேசுவில் விசுவாசிக்கிறவர்கள், முதலில். அவர் உரைத்த, வெகு எளிதாக அனைவருக்கும் புரியும் வகையில் மத் 5:3-10 ல் எழுதப்பட்டிருக்கும்  மலைப் பிரசங்கத்தின் எட்டு வசனங்களைப் படித்தறிந்து அவற்றை செயல்படுத்தினாலே இன்றைய காலகட்டத்தின் தவறான போதகங்களுக்கு தங்களை விலக்கி பாதுகாத்துக் கொள்ள முடியும்.


"எளிமை, துயரம் சகித்தல், சாந்தகுணம், நீதியாய் இருத்தல், இரக்கமாயிருத்தல், இருதயத்தில் சுத்தம், சமாதானம் பண்ணுதல், நீதியினிமித்தம் துன்பப்படுதல்" என்பவை தான் மலைப்பிரசங்கத்தின் சாராம்சம். ஆனால் இன்று இதையெல்லாம் காற்றில் பறக்கவிட்டுவிட்டு ஆசீர்வாதத்திற்கும், வல்லமைக்கும், அற்புதத்திற்கும் அலையும் ஜனக்கூட்டமாக மாறியிருப்பது தான் நவநாகரீக கிறிஸ்தவத்தின் நிலைமை. அதோடு வரதட்சணையையும், நல்ல நாள்களைக் குறித்து வைத்து விழாக்களையும், திருமணங்களையும் நடத்துதலையும் சேர்த்துக் கொள்ளலாம்!!

No comments: