Friday, July 23, 2010

உலகம்-வாழ்க்கை-விவிலியம் உண்மையறிந்தவர் யாரோ

இதுவரைக்கும் ஒண்ணுமே புரியல உலகத்தில;இப்பவும் ஒண்ணும் புரியல; இனிமேலும் எதுவும் புரிய வாய்ப்பிருக்கான்னும் தெரியல.

உலகம் உண்டாகியது என்பவர்கள் ஒருபுறம்;இறைவனால் உண்டாக்கப்பட்டது என்பவர்கள் மறுபுறம்.அதே போன்று இறைவன் மனிதனை தோற்றுவித்தான் என்பவர்கள் இருக்கையில் குரங்கிலிருந்து மனிதன் தோன்றினான் என்பவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். ஏன் இப்படி!

இறைவன் படைத்தாலும் இன்றைக்கு இத்தனை மனித இனங்கள், மனித மொழிகள், மனித நிறங்கள், பாகுபாடுகள், வேற்றுமைகள் எப்படி உருவாகின என்பதும் புரியவில்லை!

வானம், பூமி உள்ளிட்ட உலகின் அனைத்தையும் இறைவன் படைத்தார் என்று விவிலியத்தில் படித்திருக்கிறேன். ஆனால் ஒரே நேரத்தில் உலகின் ஒரு பகுதியில் இரவும் மற்றொரு பகுதியில் பகலும் ஏன் நிலவுகிறது என இன்று வரை புரியவில்லை.அதற்கு ஆதாரமான குறிப்பு ஏதும் விவிலியத்தில் இருக்கிறதா என்றும் தெரியவில்லை!

எப்படியோ உலகத்தில் வந்தோம் எப்படியோ போகிறோம். இதனிடையில் குழந்தைப்பருவம்,வாலிபம்,முதுமை என பல பருவங்களை கடந்து வர வேண்டியிருக்கிறது.

அவற்றோடு வெற்றி, தோல்வி, இன்பம், துன்பம், ஏமாற்றம், இழப்பு, ஏற்பு, நன்மை, தீமை என பல அனுபவங்களையும் காண வேண்டியுள்ளது.

இதுல பரலோகம் போகணும்னா கிறிஸ்தவத்தில திருமுழுக்கு @ ஞானஸ்நானம் எடுக்கணுமாமே! இல்லன்னா போக முடியாதாம். ஆனா சிலபேர் பரலோகத்துக்கு திருமுழுக்கு எடுத்திட்டு இந்த பூலோகத்தில பண்ற அசிங்கமும் அநியாயமுமிருக்குதே அது கொஞ்சநஞ்சமா!அப்போ இறந்தே பிறக்கின்ற குழந்தைகள் பரலோக வாய்ப்பை இழக்கின்றதா! இது குறித்த தெளிவான விளக்கங்கள் ஏன் இல்லை!

சாமியார்கள் சொல்றத கேட்டா நல்லது நடக்கும்,மேலோகத்திற்கு போகலாமுன்னு வேற கொஞ்சம் பேர் நம்புறாங்க.ஆனா நம்புற எல்லாருக்கும் நல்லது நடக்கிறது இல்லையே ஏன்!

கேளுங்கள் தரப்படும்ணு விவிலியத்தில சொல்லிருக்கு அதோட... நீ கேக்கிறதுக்கு முன்னமே உனக்கு என்ன தேவை என்ன என்பதை அறிவேன் அப்படின்னும் சொல்லியிருக்கு. கேக்கிறதா வேண்டாமா!

ஒவ்வொருவரின் செயல்களும், உலக நிகழ்வுகளும் இறைவனின் சித்தப்படி அதாவது இறைவன் எது நடக்க வேண்டும் என்று கருதுகிறாரோ அப்படித்தான் நடக்கும் என்கிறது விவிலியம். அப்படியென்றால் ஒருவர் நன்மை செய்ய நினைப்பதும் இன்னொருவர் தீமை செய்ய நினைப்பதும் எல்லாம் இறைவன் செயல் தானா? அப்போ தப்பு செய்றவங்க மேல தப்பில்லையா! (இப்போ நீங்க தலய பிச்சிக்கிறீங்களா? இருங்க இருங்க, கடைசி வர படிச்சிட்டு பிச்சுக்குங்க)

ஒருவரின் (ஆதாமின்) பாவத்தினால் மனித குலமே வெறுக்கப்பட வேண்டுமா? ஆதாமின் பாவமும் இறைவன் அறியாமல் நடந்திருக்காது அல்லவா! இன்று சிசுக்கொலை துவங்கி இனப்படுகொலை வரை, வறுமை துவங்கி பட்டினி வரை மனித குலம் படும் அல்லல்களை காணத்தான் ஆதாமை பாவம் செய்ய அனுமதித்தாரா!

இந்த கேள்விகள் ஒருபுறமிருந்தாலும் தவறாமல் காலையில் உதயமாகும் சூரியனும், இரவு பகல் மாறுதலும், மழையும், இயற்கையும் ஏதோ ஒன்றின் அல்லது எவரோ ஒருவரின் (இறைவன்)கட்டுப்பாட்டில் இருக்கிறது என்பதாகத் தான் மனதிற்கு படுகிறது.

இந்த கேள்விகளும், அனுபவமும் அடுத்த நிமிடம் நன்மையோ தீமையோ என்ன நடந்தாலும் அதனை ஏற்றுக் கொள்கின்ற பக்குவத்தை எனக்கு தந்திருக்கிறது என்றால் அது மிகையல்ல.

நாளை என்ன நடக்கும் என்பதைக் குறித்து கவலைப்படாமல் "கடவுளை நம்பு கடமையை செய்" என்ற மார்த்தாண்டம் எல்.எம்.எஸ் பள்ளியின் கருப்பொருளின் படி தான் இன்றும் ஓட்டிக்கொண்டிருக்கிறேன் வாழ்க்கையை... எதுவும் புரியாமல்.